ஈரோடு: ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் என 5 இடங்களில் உழவர் சந்தை இயங்கி வந்தது.
உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் நேரடியாக வந்து விற்பதால், மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு காய்கறி விலை குறைவாகவே இருக்கும். இதனால் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்துக் காணப்படும்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.30 மணிக்கு விவசாயிகள் உழவர் சந்தைக்கு வந்து விடுவார்கள். பின்னர் 5.30 மணி முதல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கரோனா தாக்கம் காரணமாக உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
செயல்படத்தொடங்கிய உழவர்சந்தை
கரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த 5ஆம் தேதி முதல் பிற காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தை செயல்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உழவர் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தையும் நேற்று முதல் செயல்படத் தொடங்கின.
உழவர் சந்தையில் 50 விழுக்காடு கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று சம்பத் நகரில் 65 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முதல் நாள் என்பதால் 54 கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
பாதுகாப்பு நடைமுறைகள்
நுழைவுவாயிலில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வந்த பொதுமக்கள், விவசாயிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. நேற்று திறக்கப்பட்ட 54 கடைகளில் 40 கடையில் உள்ள விவசாயிகள் கரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.
மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் பெரியார் நகர்ப் பகுதி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் உள்ள உழவர் சந்தையும் இன்று செயல்படத் தொடங்கியது.
இதையும் படிங்க: குடிநீர் கேட்டு இரு கிராம மக்கள் சாலை மறியல்!