ஈரோடு அருகேயுள்ள பெரிய வலசு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமாரசாமி. இவர், நீண்ட நாளுக்குப் பின்னர் தனது நண்பர்களான காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தரணிக்குமார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரு நண்பர்களை சந்தித்துள்ளார்.
அப்போது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெருந்துறை அருகேவுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக குமாரசாமியும், தரணிக்குமாரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதைப்பார்த்த கரையிலிருந்த மற்ற நண்பர்கள், பெருந்துறை காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்குத் தீயணைப்புத்துறையினருடன் வந்த காவல்துறையினர், நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாறையின் அடியில் சிக்கியிருந்த குமாரசாமியின் உடலை மீட்டனர். தொடர்ந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தரணிக்குமாரின் உடலை நான்கு கி.மீ., அப்பால் கண்டுபிடித்தனர். இதனையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரிக்கின்றனர். நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - 10 மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்!