ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக 100, 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, அந்தியூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், அந்தியூர் காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் கள்ள நோட்டு அச்சடிப்பது குறித்து தகவல் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்வம் வீட்டிற்கு விரைந்த காவல் துறையினர், அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில், செல்வம், கோவிந்தராஜ் ஆகியோர் தங்களது வீட்டில் கலர் ஜெராக்ஸ் மிஷின் வைத்து, கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் அச்சடித்து வைத்திருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 800 ரூபாய் கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், இருவரையும் கைதுசெய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், வழக்கில் தொடர்புடைய பாலசுப்பிரமணியம் என்பவரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
தற்போது காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட கோவிந்தராஜ், 2019ஆம் ஆண்டு கள்ள நோட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் வங்கியில் பணம் செலுத்த வந்த இளைஞர் கைது - கள்ளநோட்டுகள் பறிமுதல்!