சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் சமூக விரோதிகள் ஊடுருவல் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, நக்சல் பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பீக்கரிபாளையம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி திரிந்த இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
விசாரணையில் பீக்கரிபாளையத்தைச் சேர்ந்த மாரி, திப்பன் ஆகிய இருவரிடம் காவலர்கள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து கிலோ மான் இறைச்சி, கஞ்சா செடிகள், மானை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சுருக்குக் கம்பிகள், சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இரவு நேரத்தில் சுருக்குக் கம்பி வைத்து மானை வேட்டையாடுவதும், அதனைக் கொன்று இறைச்சி கடத்தி வெளிச்சந்தையில் விற்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவரையும் கைதுசெய்த நக்சல் பிரிவு காவல் துறையினர் வன குற்றத் தடுப்பு துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் வனத்துறையினர் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.