ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மீசைக்கோனூரான் தொட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. 15 வீடுகள் மட்டுமே உள்ள இந்த மலை கிராமத்தில் சோளகர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் சரியான சாலை வசதியும் இல்லை.
இதன் காரணமாக இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். தங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலர்கள் அந்த கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க வந்தனர். மின்கம்பங்களை வாகனத்தில் எடுத்து வந்த போது கிராமத்திற்கு செல்ல சரிவர சாலை வசதி இல்லாததால் கானக்கரை பகுதியில் மின் கம்பத்தை இறக்கி வைத்து விட்டு சென்று விட்டனர்.
இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மின்கம்பத்தை மரக்கட்டைகளால் கட்டி தோளில் சுமந்தபடி மலை கிராமத்திற்கு மின்கம்பத்தை கொண்டு சென்றனர். இந்த காட்சியை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பொது விநியோக பொருள்கள் கடத்தலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!