ஈரோடு: மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய இரண்டு நாள் போராட்டம் இன்று (மார்ச் 28) தொடங்கியது. இந்தப் போராட்டம் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கிறது.
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை பாயும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாடு முழவதும் குறைந்த அளவே பேருந்துகளே இயக்கப்படுகின்றன. போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு: அந்த வகையில் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு 450-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வராததால் 90 பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே இயங்கப்பட்டும் 11 அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் வார இறுதி நாள்களில் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களும், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக சென்றவர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக திருப்பூர் பனியன் கம்பெனிக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஒரு பிடி மண்ணைக்கூட என்எல்சி நிறுவனத்திற்கு தர மாட்டோம்'- அன்புமணி ராமதாஸ்