ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெண் குட்டியானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் குட்டியானையை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.
இந்நிலையில் குட்டியானையை மற்ற யானைக்கூட்டம் சேர்க்காததால், அது வனப்பகுதியை விட்டு வெளியேறி வனச்சாலையில் சுற்றித்திரிந்தது. குட்டியானையை வனத்துறையினர் திரும்ப மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் குட்டியானையை பரிசோதித்து தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.
பெண் குட்டியாணை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு சென்று பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தநிலையில், திடீரென வனத்துறையினர் குட்டியானையை வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். மேலும் யானை குட்டியை காட்டில் விடும் வரை மிகவும் ரகசியமாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக்தின் இணை இயக்குநர் அருண்லால் கூறுகையில், ’தாயை இழந்த குட்டியானையை மீண்டும் யானைக் கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குட்டியானை இருக்கும் கூட்டத்தில் இந்த யானை சேர்க்கப்படும். யானைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், குட்டியை மீட்டு வண்டலூர் வன உயிரின பூங்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மனிதனுடன் பழகிய குட்டியானை தாய் யானை கூட்டத்தில் சேராது. மேலும் 3 மாத குட்டி என்பதால் அதற்கு சாப்பிட புல் தேடுவதற்குத் தெரியாது. இதனால் பட்டினியால் யானை இறந்துவிடும் என்றும் வண்டலூர் வனப்பூங்காவுக்கு அனுப்பி வைத்தால் அதனை காப்பாற்ற முடியும் என்றார்.
இதையும் படிங்க: குட்கா வழக்கில் அமைச்சரின் பெயர்?