ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர், சிறுமியர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு, கொலம்பஸ், வாட்டர் கேம், ரயில், படகு இல்லம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்விடுமுறை என்பதால் இன்று காலை முதல் பவானிசாகர் அணைப்பூங்காவிற்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து விடுமுறையை உற்சாகத்துடன் கழித்தனர்.
பவானிசாகரில் இதமான காலநிலை நிலவுவதால் பச்சை பசேலென உள்ள கொரியன் புல்தரைகளில் அமர்ந்து சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறினர். சிறுவர், சிறுமியர்கள் தண்ணீரில் குளித்தும், ஊஞ்சல், சறுக்கு, படகு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடியும் மகிழ்ந்தனர்.
மேலும், பொதுமக்கள் குடும்பத்துடன் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நாளை காணும் பொங்கல் என்பதால் பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கலன்று மட்டுமே பகலில் திறக்கப்படும் கோயில்!