ஈரோடு: பவானிசாகர் அணையின் முன்பு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், செயற்கை நீரூற்று, சிறுவர் ரயில், ஊஞ்சல், சறுக்கு, கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்கள், அழகிய புல்தரைகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் தினமும் பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.
ஒமைக்ரான் பரவல் காரணமாகச் சுற்றுலாத் தலங்களுக்குப் பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் இன்று (ஜனவரி 2) வரை பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனப் பொதுப்பணித் துறை அறிவித்தது. இதையடுத்து, அணையின் பூங்காவும் மூடப்பட்டது.
தொடர் விடுமுறைக் காரணமாக, இன்று பவானிசாகர் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அணையின் பூங்கா மூடப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அணையின் முன்புள்ள பவானி ஆற்றுப் பாலத்தின் மீது நின்று செல்போன்களில் செல்ஃபி எடுத்து சென்றனர்.
பின்னர், அணையின் முன்பு உள்ள மீன் கடைகளில் மீன் வறுவல் உள்ளிட்ட மீன் உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு அணை பூங்காவைப் பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கடன் பிரச்னையால் விபரீதம் - மனைவி, மகன்களை கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை