திருப்பூர்: பனியன் தொழிலால் நாடு முழுக்க பிரசித்திபெற்ற நகரமாக இருக்கக்கூடிய திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றின் வரிகள் மூலமாக மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் சுமார் 300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வரி வருவாய் மூலமாக மாநகராட்சிப் பல்வேறு திட்டப் பணிகளை செய்து வருகிறது.
கடந்த 2007ல் 15,500 வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இதற்காக 120 கி.மீ., குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நடந்தன. தற்போது மாநகராட்சியில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 75 ஆயிரம் வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமாராக 20 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், இன்னமும் முழுமையாக பாதாளச் சாக்கடைத் திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இணைப்புகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் தான் உள்ளது. ஆனால், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு அனுப்பி உள்ள வரி கேட்பு அறிவிப்புகளில் பாதாளச் சாக்கடை வரியையும் சேர்த்து கேட்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது.
பாதாளச் சாக்கடைத் திட்டமானது குழாய்கள் பதிக்கப்பட்டு, இணைப்புகள் வழங்கப்பட்டாலும், அதைப் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரவில்லை. ஆனாலும் மாநகராட்சி வரி கேட்பது நியாயமற்றது என்கின்றனர், திருப்பூர் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.
இதையும் படிங்க: மதங்களை இழிவுபடுத்தியதாக சீமான் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!
திருப்பூர் மாநகராட்சி 2022ல் மாநகராட்சியின் வீட்டு வரி, வணிகப் பயன்பாட்டு கட்டட வரி என அனைத்தையும் உயர்த்தினார்கள். இந்த வரி உயர்வு திடீரென மக்களுக்கு பெரும் சுமையை தருவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் தான் மாநகராட்சியின் குப்பை வரியும் அமலுக்கு வந்து இருக்கிறது. பாதாள சாக்கடை வரியும் அமலுக்கு வந்து இருக்கிறது. இப்படி உயர்த்தப்பட்ட வரிகள், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என எல்லாமுமாக சேர்ந்து பொதுமக்களுக்கு சுமையை உருவாக்கி உள்ளது. சாதாரணமாக சில நூறுகளில் வரி கட்டியவர்கள் கூட ஆயிரங்களில் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகமானது வீட்டு வரி, கட்டட வரிகளை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. அதையும் முன் தேதியிட்டு உயர்த்தி பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்பினரை கடும் நிதிச் சிக்கலில் தள்ளி உள்ளார்கள். 2022ல் வரியை உயர்த்தினாலும் 2012-13ம் ஆண்டுக்கும் சேர்த்து கட்ட வற்புறுத்துவது சரியல்ல என்கிறார், திருப்பூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி.
மேலும் அவர் கூறுகையில், ' ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன் தேதியிட்டு வரியை உயர்த்துவது எப்படி சரியாகும். ஏற்கனவே வரி கட்டக்கூடியவர்கள் 100 முதல் 200 சதவீத உயர்வு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது மட்டும் இல்லாமல் பயன்பாட்டுக்கே வராத பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு வரி கட்ட வற்புறுத்துவது சரியல்ல. இதை மாநகராட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன் கூறுகையில், 'திருப்பூர் மாநகராட்சி வரி உயர்வு பொதுமக்களை வதைக்கும் செயலாகும். குப்பை வரி விதித்து இருக்கிறார்கள். குப்பையை அகற்றுவதில்லை. நிதி ஆதாரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். பாதாளச் சாக்கடை இணைப்புகள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் நிலையில் வரி விதிப்பது கழுத்தை நெரிக்கும் செயலாக உள்ளது. இதை பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
உயர்த்தப்பட்ட வரி, புதிதாக போடப்பட்ட குப்பை வரி, பாதாளச் சாக்கடை வரி போன்ற வரிககளால் திணறும் திருப்பூர் மக்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் விதமாக உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்கவும், பயன்பாட்டுக்கு வராத பாதாளச் சாக்கடைத் திட்ட வரியை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வரதட்சணை புகாரில் கணவர் பெயரை மட்டும் சேர்த்தால் போதும் - அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்