ஈரோடு: திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் இந்திரா நகர் பகுதியில் இவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பண்ணை வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. 27 லட்சம் பணம் கொள்ளைபோனது.
இது குறித்து முத்துசாமி பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் முத்துசாமியிடம் பணிபுரிந்து வந்த தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேஷ் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வெங்கடேஷை பிடித்து விசாரித்தபோது தனது முதலாளி முத்துச்சாமி பணத்தை பண்ணை வீட்டில் கொண்டு வந்த வைத்தது தெரிந்ததால் தனது நண்பர்களான தர்மபுரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பண்ணை வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் ரூ. 27 லட்சத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பாஜக பிரமுகர் கார் எரிப்பு... ஈரோட்டில் பரபரப்பு...