தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் விலையில்லா அரிசி விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே, கரோனா ஊரடங்கை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநிலம் முழுவதும் கூடுதலாக விலையில்லா அரிசி வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி தரமில்லாமலும், பல வண்ணத்திலும் வழங்கப்பட்டதாகவும், அரசு அறிவித்ததைப் போல் கூடுதலாக விலையில்லா அரிசி வழங்கப்படவில்லை எனக்கூறியும் நியாயவிலைக் கடைகளின் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கையை ஏற்று, வெளி மாநிலத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசியை வழங்குவதற்காக தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து ஆயிரம் டன் அரிசி மூட்டைகள் சிறப்பு சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது.
குடிமைப் பொருள் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள இந்த அரி்சி மூட்டைகள், அடுத்த மாதம் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது.