ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா கிராமத்தின் குறுக்கே மாயாறு ஓடுகிறது. இக்கிராம மக்கள் அங்கிருந்து வெளியூர் செல்வதற்கும் மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இதனைக் கடந்து செல்ல பரிசல் முக்கியப் போக்குவரத்தாக உள்ளது. மாயாற்றில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் பரிசல் நிறுத்தப்படும்.
இந்நிலையில், கூடலூர் உதகை உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் அதிகரித்து செல்வதால் பரிசல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெங்குமரஹாடவிலிருந்து புறப்படும் அரசுப்பேருந்தை பிடிக்க கிராம மக்கள் மாயாற்றுக்கு வந்தனர். தண்ணீர் குறைவாக இருந்ததால் பரிசலில் 7 பேர் என இருமுறை மட்டுமே ஏற்றிக்கொண்டு கரையில் சேர்க்கப்பட்டனர்.
பேருந்தை பிடிக்க வந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பரிசலில் கடக்க முடியாமல் ஊர் திரும்பினர். மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பரிசல் இயக்க முடியாமல் போனது. இதுபோன்ற மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக தெங்குமரஹாடாவில் வசிக்கும் சுமார் இரண்டாயிரம் மக்களுக்கும் போக்குவரத்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும், தெங்குமரஹடா பகுதியில் ஓடும் மாயாற்றில் நடைபாலம் கட்டித்தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அரசு அதனைக் கண்டுகொள்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.