காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா. இவர் செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2017ஆம் ஆண்டு MCA பட்ட மேற்படிப்பிற்காகச் சேர்ந்துள்ளார். சில தனிப்பட்ட காரணங்களால் இரண்டு நாட்கள் மட்டுமே கல்லூரிக்குச் சென்ற சரண்யா அதற்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால், சரண்யாவின் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்திடமே இருந்துள்ளன.
இந்நிலையில், சரண்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க முயன்றபோது, படிப்பு சான்றிதழ்கள் வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்திடம் சான்றிதழ்களை சரண்யா கேட்டபோது, ரூ. 40 ஆயிரம் பணத்தைக் கட்டினால் மட்டுமே சான்றிதழ்களைத் தர முடியும் எனக் கல்லூரி நிர்வாகம் அவரை மிரட்டியுள்ளது.
எனவே, ரூ. 40 ஆயிரம் தருமாறு மிரட்டிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், தனது அசல் சான்றிதழ்களைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரண்யா தனது பெற்றோருடன் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் கைவரிசை: தூத்துக்குடியினர் மூவர் குண்டாஸில் கைது!