மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா மலை தர்ஹாவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரிய வழக்கு மற்ற வழக்குகளோடு இணைத்து பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது. அதோடு அப்பகுதியினுள் மாமிசங்களை சமைத்து, பரிமாறவும் அனுமதிக்க கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. அதோடு திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்படுவதும் வருத்தமளிக்கிறது. இது மதரீதியாக பிரச்னைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.
ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியக்கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், திருப்பரங்குன்றம், சிக்கந்தர் மலை குறித்து நிலுவையில் உள்ள் வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.