சென்னை: கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்த கூடாது எனவும், இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தின் தகவல்கள் பல்வேறு தரவுகளின் படி கூறப்படுகிறது எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் ''சமூக மாற்றத்திற்கான அறிவியல் சவால்கள்'' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், '' தற்போது வெப்பம் அதிகரிப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. மழை மற்றும் வெப்ப அலையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்படுகிறது. மாணவர்களுக்கு வேறு நாட்களில் வேலை நாட்களாக வைத்து கல்வியை கற்றுத் தருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையை பொருத்தவரையில் கடந்த 32 ஆண்டுகளில் அதன் சராசரி வெப்ப அளவை கண்காணிக்கும் போது, அதிகரித்து வருகிறது.
மழையின் அளவு ஒவ்வொரு ஆண்டும் இடத்திற்கு இடம் மாறுபட்டு வருகிறது. அரபிக் கடலில் அதிகளவில் புயல் உருவாகி வருகிறது. வங்காள விரிகுடாவில் புயல் உருவாகும் அளவு குறைந்துள்ளது. குறைந்த நாட்களில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதற்கு காலநிலை மாற்றம் காரணமாக உள்ளது. கடந்த காலங்களில் மழையும், வறட்சியும் வந்துள்ளது. தற்போது வானிலை ஆய்வு மையம் தரவுகளை பெறுவதற்கு பல்வேறு இடங்களில் நவீன கருவிகளை பொருத்தி உள்ளது'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போற்றப்பட வேண்டிய பட்டியலின மக்களை, பிரிட்டிஷ் ஆட்சியில் மோசமாக நடத்தினர் - ஆளுநர் ரவி
மாநாட்டில் மாணவி ஒருவர், கனமழை காலங்களில் தனியார் வானிலை ஆர்வலர்கள் சொல்லும் தகவலுக்கும் வானிலை ஆய்வு மையம் சொல்லும் தகவலுக்கும் பல மாறுபாடுகள் இருக்கிறதே? சில நேரங்களில் தனியார் வானிலை ஆர்வலர்கள் சொல்லும் தகவல் சரியாக இருக்கிறதே? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பாலச்சந்திரன், '' பெருமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் சில கருத்துகளை பேசுகிறார்கள். இது போன்ற தருணத்தில் புகழுக்காக பேசுவதை பொருட்படுத்தக் கூடாது. அறிவியல்பூர்வமான தகவலை உறுதி செய்ய வேண்டும். வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவியல்பூர்வமான நகர்வுகளை கவனிக்க வேண்டியது அவசியம். எனவே தான் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு தருணத்திலும் கவனமாக இருக்கிறோம். வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருக்கின்றனர். இது நமக்கு இன்னும் உதவியாக இருக்கும். இந்திய வானிலை மையம் பல்வேறுத் தரவுகளின் அடிப்படையில் மழை குறித்த தகவல்களை வெளியிடுகிறது'' என தெரிவித்தார்.