ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தரப்பாடி சுண்ணாம்புபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் காவல்நாய்களை விற்பனை செய்து வருகிறார்.
ரவி இல்லாதபோது அவரது மனைவி பானுமதி வீட்டில் நாய்களை விற்பனை செய்து வருவார். இந்நிலையில், 2011ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நாய் வேண்டும் எனக்கூறி பானுமதியிடம் நைசாக பேசி, அவரது கழுத்தில் இருந்த 7.5 சவரன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனர்.
இந்நிலையில், திருச்சி காட்டுப்புதூரைச் சேர்ந்த சிவானந்தம் (31) என்பவரை காவலர்கள் கைது செய்தனர். அப்போது இக்குற்றத்தில் காட்டுப்புதூரைச் சேர்ந்த வையாபுரி மகன் நடராஜ் (41), பழனிச்சாமி மகன் விஜயகுமார் (32) ஆகியோரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கவுந்தபாடி காவல் துறையினர் கைது இருவரையும் செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சிவானந்தம், தலைமறைவானார். மற்ற இருவர் மீது நடந்த இந்த வழக்கு விசாரணை கோபியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன், திருட்டு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நடராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்படாததால் விஜயகுமாரை விடுதலை செய்தார்.
இதையும் படிங்க: காவலாளியை தாக்கி கோயிலில் கொள்ளை: இளைஞர்களுக்கு போலீஸ் வலை!