ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், அடர்ந்த வனப்பகுதியில் கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்தக் கோயிலுக்கு தாளவாடி சுற்றுவட்டாரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும், கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டை, மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்கு பெண்கள் வர அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்கு செல்ல முடியும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் முன்பு சுமார் 40 அடி நீளம் தீக்குண்டம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து குண்டத்தைச் சுற்றி வந்த கோயில் பூசாரி மல்லிகார்ஜுன பிரசாத், பக்திப் பரவசத்துடன் தீக்குண்டம் இறங்கினார். பூசாரி தீக்குண்டம் இறங்கும்போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ஆரவார கோஷமிட்டனர். வழக்கமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பண்டிகையில் இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கரோனா அச்சம் காரணமாக அன்னதானம் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் தாளவாடி காவல் துறையினரும் வனத்துறையினரும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.
இதையும் படிங்க: வடஇந்தியப் பெண்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து பரப்புரையில் ஈடுபடுத்திய வானதி