ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் செண்டுமல்லி பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்த பூக்கள் வேன் மூலம் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. ஆவணி மாத முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை முன்னிட்டு செண்டுமல்லி பூக்கள் ஒரு கிலோ ரூ.100 விற்பனையானது.
தற்போது விசேஷ நாட்கள் முடிவடைந்ததால் செண்டுமல்லி பூக்களை ஒரு கிலோ ரூ.10-க்கு கூட வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதன் காரணமாக இன்று(செப்.14) சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு செண்டுமல்லி பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், மீண்டும் பூக்களை திருப்பி எடுத்துச் செல்ல மனமில்லாமல் சாக்கு மூட்டைகளில் இருந்த பூக்களை கீழே கொட்டிச் சென்றனர்.
உரிய விலை கிடைக்காத போது தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கர்நாடக கல்வி அறக்கட்டளை பள்ளியில் மாணவிகளை சாதிப் பெயரை சொல்லி திட்டுவதாக புகார்...