ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களில் நுழைந்து, விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தாக்கி கொன்று வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாயி குப்புசாமி என்பவரது விவசாய தோட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் வனத்துறையினர் அப்பகுதியில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தினர்.
அதன்படி, இன்று அதிகாலை குப்புசாமி தோட்டத்திற்கு வந்த சிறுத்தை ஒன்று, தோட்டத்து சாலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை கடித்துக் கொன்று இழுத்துச்சென்றது. இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்தத் தானியங்கி கேமராவில் (சிசிடிவி) பதிவாகியுள்ளது.
சிறுத்தை வெள்ளாட்டை அடித்துக் கொன்று இழுத்துச்சென்றது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையின் அட்டகாசம் அதிகரித்துவருவதால், விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். கால்நடைகளை அடித்துக் கொல்லும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய தோட்டத்தில் இருந்த ஆட்டை சிறுத்தை கடித்து இழுத்துச் செல்லும் காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி - தனிமைப்படுத்தப்பட்ட 1,800 வீடுகள்!