தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக ஊராட்சிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பரப்புரை முடிவடைந்தது. முன்னதாக, இறுதிகட்டப் பரப்புரையில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டினர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடுமாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் பத்து பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பொது வேட்பாளராகப் போட்டியிடும் முதுகலை பட்டதாரி பிரகாஷ் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க அவரது ஆதவாளர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக, வேட்பாளரை அழைத்துக்கொண்டு சென்றனர். குறிப்பாக, பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், அண்ணாநகர், வரப்பள்ளம், அடசப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்குச் சென்றனர்.
செல்லும் இடங்களில் எல்லாம் மாட்டுவண்டியில் வேட்பாளர் வருவதைப் பார்த்து வியந்து போய், வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷின் சின்னமான மூக்குக்கண்ணாடியை பரப்புரைக்குச் செல்லும் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மோட்டார் வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற வேட்பாளர்கள், இவரது மாட்டுவண்டிப் பயணத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், ' வாக்காளர்களுக்கு வித்தியாசமாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாகவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் மாட்டுவண்டி பரப்புரை மேற்கொண்டேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: