ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
இதையடுத்து அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்குமாறு பாசனப் பகுதி உழவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 15இல் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரைசெய்தது.
ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி
உழவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 12ஆம் தேதிவரை மொத்தம் 120 நாள்களுக்கு கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்திற்கு 23 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீர் திறக்குமாறு அரசாணை வெளியிட்டது. இதன்படி, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு முதலில் 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி 2300 கனஅடி நீராக வெளியேற்றப்படுகிறது. முன்னதாக, அணையில் உள்ள வாய்க்கால் மதகு பொத்தானை அழுத்தி அமைச்சர் சாமிநாதன் திறந்துவைத்தார். அப்போது வாய்க்காலில் சீறிப்பாய்ந்து வந்த நீரை உழவர்கள், அமைச்சர் சாமிநாதன், ஆட்சியர் கிருஷ்ணனுன்னி ஆகியோர் மலர்த்தூவி வரவேற்றனர்.
நீர் திறப்பு மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் உள்ள இரட்டைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால், ஒற்றைப்படை மதகுகள் பாசன பகுதிகளில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும்.
வியக்கத்தக்க வேளாண் நிதிநிலை அறிக்கை
அணையின் நீர்மட்டம் 100.84 அடி, நீர்வரத்து 3544 கனஅடி, அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1800 கனஅடி, நீர் இருப்பு 29.38 டிஎம்சி ஆக உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்திற்கு நீரைத் திறந்துவைத்த பின்னர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தமிழ்நாடு அரசின் வரலாற்றிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்து வேளாண் துறைக்கு முதலமைச்சர் தனி அங்கீகாரம் வழங்கியுள்ளார். வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை உழவர்கள் பயன்படுத்தி உணவு உற்பத்தியில் மேம்பாடு அடைய வழிவகை ஏற்பட்டுள்ளது.
மற்ற மாநில உழவர்கள்கூட தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்றைக்கு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மூலம் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
உழவர்களிடம் கலந்துபேசி முடிவு
மேலும் உழவர்களுக்குத் தேவையான விதை நெல், ரசாயன உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் பகுதியில் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து உழவர்களிடம் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுகவின் 3ஆவது தலைமுறையே' - சசிகலா ஆதரவு சுவரொட்டிகளால் பரபரப்பு