கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தொழிற்சாலைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சாய ஆலைகள், தோல் தொழிற்சாலை, கண்ணாடி தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை, ஆயுத்த ஆடை தொழிற்சாலை, பீங்கான் தொழிற்சாலை என 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.
தற்போது அவைகள் இயங்காததால், சிப்காட் தொழிற்பேட்டையைச் சுற்றியிருக்கும் பெரியவேட்டுவபாளையம், சின்னவேட்டுவபாளையம், காசிபில்லாம்பாளையம், எழுதிங்கள்பட்டி, ஈங்கூர், கடப்பமடை, ஓடைக்காட்டூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அதில் 66 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி