ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் கரட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர், பிரபு. அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான பொன்னுசாமியின் மகள் தர்ச்சனா. இந்நிலையில் பிரபுவும் தர்ச்சனாவும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
பிரபு ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார், அவரது உறவினர்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், தர்ச்சனா கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்றதால், அவர்களது பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கடத்தூர் காவல் துறையினர் காணாமல் போன தர்ச்சனாவைத் தேடி வந்தனர்.
தேடப்பட்ட நிலையில், பிரபுவும் தர்ச்சனாவும் திருமணம் செய்து கொண்டு ஏலூரில் உள்ள பிரபுவின் தாய் மாமன் மகன் ஜெயக்குமார் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பெண் வீட்டாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நேற்று (மே.20) தர்ச்சனாவின் தந்தை பொன்னுசாமி, தாய் ஜெயந்தி உறவினர் சாய் ஆகிய மூவரும் ஜெயக்குமார் வீட்டிற்குச் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பெண்ணின் உறவினர் ஜெயக்குமார் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேனை பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துள்ளனர்.
ஆம்னி வேன் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தது. மேலும், பெண் வீட்டார் தன் மகளை வீட்டில் கொண்டு வந்து விடுமாறும்; இல்லையென்றால் உங்களையும் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்து விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆம்னி வேனை எரித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விட்டுச் சென்ற பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபுவின் மாமன் மகன் ஜெயக்குமார் பங்களாபுதுர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கரை ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா: போலீஸ் விசாரணை!