ஈரோடு: அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்களுக்கும் சோதனை ஓட்டமாக தண்ணீர் சென்றடைந்துள்ளது. இதில், மொத்தம் உள்ள 106.8 கிலோ மீட்டர் நீளமும் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, விரைவில் முதலமைச்சர் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை திறந்து வைப்பதற்கான தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 2504 பயனாளிகளுக்கு 3.52 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ், மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டங்களின்கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும், இவ்விழாவிற்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மேலும், விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 'தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 335 பயனாளிகளுக்கு, 1 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவியும், 1 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, புதுமைப்பெண் நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து 169 மாணவிகளுக்கு 43 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மொத்தம் 3 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 2504 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன’ என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இதையடுத்து, பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் சிறந்த பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது,ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்களுக்கும் சோதனை ஓட்டமாக தண்ணீர் சென்றடைந்துள்ளதாகவும், மொத்தம் உள்ள 106.8 கிலோ மீட்டர் நீளமும் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
'இந்த திட்டத்தில் 82 கிளைகளாகப் பிரிந்து 1,045 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் சோதனை நடந்து வருகிறது; விரைவில் முதலமைச்சர் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை திறந்து வைப்பதற்கான தேதி முடிவு செய்யப்படும்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 868 காலிப்பணியிடங்கள்!