தமிழ்நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவலையடுத்து, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக ஆசனூர் உள்ளது. இந்த பகுதி வழியாக கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் காவல்துறை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து பண்ணாரி சோதனைச்சாவடியிலும் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வழியாக வரும் வாகனங்களை தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், சந்தேகிக்கும்படியான வாகன ஓட்டிகளிடம் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாகனம் செல்லும் விபரங்களும் உள்ளிட்டவைகளை சரிபார்க்கப்படுகின்றன.
திருவிழா காலம் என்பதால் பக்தர்கள் போன்று வரும் மாவோயிஸ்டுகளின் ஊடுருவலை தடுக்கவும், புதிய நபர்களின் வருகையைக் கண்டறியவும் காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.