ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள வசந்தம் நகரில் ஏ.வி.எஸ் காட்டன் மில்லில் மின்னல் தாக்கி, திங்கள்கிழமை (ஏப்.12) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
முன்னதாக, அன்றைய தினம் மாலை 4 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதே சமயம் சுமார் 4.30 மணியளவில் இடி தாக்கி ஆலையின் மையப்பகுதியில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதையடுத்து, ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காற்றின் வேகம் அதிகமாக வீசியதால் மற்ற பகுதிகளுக்கு தீ மளமளவென்று ஆலை முழுவதும் பரவியது.
இந்நிலையில், ஈரோடு தீயணைப்பு துறையினர் மற்றும் பவானி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மளமளவென்று பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். மழை காற்று வேகமாக வீசியது காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
தீயணைப்பு துறை வாகனத்திற்கு தனியார் தண்ணீர் வண்டிகள் மூலம் தண்ணீர் மேலும் மேலும் நிரப்பப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி தீவிரமாக நடந்து வந்தது. மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தினால், மேலும் தீயணைப்பு துறையை வரவழைத்து தீ பரவலை கட்டுப்படுத்த முயன்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆலைக்குள் சுமார் 3 கோடி ரூபாய் பொருள்கள் உள்ளதாக நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின. தொடர்ந்து ஆறு மணிக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.