கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலின் வகையறா கோயில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் குண்டம் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக கோயில் திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் குண்டம், தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பூச்சாட்டுதலுடன் குண்டம் தேர்த்திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து 3 கோயில்களிலும் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று(ஏப்.08) நடந்தது, இதற்காக காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று இரவு தீ பற்ற வைத்த நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து இன்று (ஏப்.8) நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக தொடங்கியன. வழக்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள், ஆனால் இந்த வருடம் கரோனா தாக்கம் காரணமாக பூசாரிகள் மட்டுமே இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மூன்று வகையறா கோயில்களை சேர்ந்த ஒன்பது பூசாரிகள் குண்டம் இறங்கினர். இதைத் தொடர்ந்து தேரோட்ட விழா நடைபெற்றது. இதற்காக சின்ன மாரியம்மன் கோயில் வளாகம் முன்பிருந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கரோனா தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடந்தது. பொன்வீதி, டவுன் காவல் நிலையம், மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, கச்சேரி வீதி வழியாக திரும்பவும் சின்ன மாரியம்மன் கோயிலில் தேர் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை - தமிழ்நாடு அரசு