ஈரோடு : கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வாய்கால் வீதி பகுதியில் கோபி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சம் மதிப்பீட்டில் பழைய ஆழ்குழாய் கிணற்றில் மின்விசை பம்பு அமைத்து பொமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது ''கோபிசெட்டிபாளையம் பகுதியில் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி வழங்கப்படாதது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினுடைய துணை இயக்குநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைந்து கோபி பகுதியில் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகளில் தக்காளி வழங்கப்படவில்லை என்றால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் இன்னும் இரண்டு தினங்களில் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நியாய விலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபோல அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 500 மதுபானக் கடைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், ஆலயங்கள், விவசாயிகள் நிறைந்துள்ள இடங்களில் எங்கெங்கு மதுபானக் கடைகளை(TASMAC) அகற்ற கோரிக்கை வைத்துள்ளார்களோ அந்த கடைகளையும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு ஜெயக்குமார் இது குறித்த கருத்துகளைத் தெரிவித்து வருகிறார், எல்லோரும் இது குறித்து கருத்துகளை தெரிவிப்பது சாலப் பொருத்தமாக இருக்காது என்றார். அதிமுக விவகாரம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை விதிமுறைகளுக்கு எதிரானது என புகழேந்தி தெரிவித்த கருத்துக்கு புகழேந்திக்கு தமிழகத்தில் வாக்கு உள்ளதா என தெரிந்து விட்டு பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!