ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விளைபொருட்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி நால்ரோடு சாலையில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காட்டு யானை தாக்கியதால், அப்பெண்ணின் கால், இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அந்த யானை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களையும் துரத்தியுள்ளது.
அப்போது நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி குமார் என்பவரை யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.