ஈரோடு: தாளவாடி மலைப்பகுதி அருகில் சேஷன்நகர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி தாளவாடி வனப்பகுதி மற்றும் கர்நாடக வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலிகள் சேஷன்நகர் கிராமத்திற்குள் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் பசு மாடுகளை வேட்டையாடுவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புலி 3 மாடுகளை அடித்துக் கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடும் புலியை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின் பேரில், புலி நடமாடும் சேசன் நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் புதர் மண்டிக் கிடக்கிறது.
ஆகையால், அப்பகுதியில் தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் மற்றும் கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் மற்றும் கேர்குடி வனத்துறையினர் இணைந்து புலி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ததோடு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறை சார்பில் பொருத்தப்பட்ட கேமராவில் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், வனப்பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலங்களில் உள்ள புதர்களை அகற்றும் பணியினை மேற்கொள்ள உள்ளதாகவும், தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்: அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்!