ஈரோடு: தமிழ்நாட்டில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது குறித்து சில மாணவிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்தும், அந்தப் புகார்களுக்குத் தீர்வு எட்டப்பட்டது.
இந்நிலை தொடராமல் இருப்பதற்காக, தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது புகார் தெரிவிப்பதற்காகப் புகார் பெட்டி வைக்க ஏற்பாடுசெய்துள்ளது.
பள்ளிகளில் புகார் பெட்டி
அந்த வகையில் சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவிகள் அச்சமின்றி பாலியல் புகார் அளிக்க தலைமையாசிரியர் அறைக்கு அருகே அனைவரின் பார்வைக்குத் தெரியும்படி புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இப்புகார் பெட்டியில் மாணவிகள் எந்த நேரத்திலும் தங்களது புகாரை எழுத்து மூலமாகப் பதிவுசெய்யலாம். இப்பெட்டியானது பூட்டப்பட்டு அதன் திறவுகோல் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இப்புகார்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், பள்ளிகளில் நடைபெறும் பாலியல் புகார் குறித்து சமூகநலத் துறை அலுவலர், மாவட்ட சட்டப்பணிகள் செயலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது, மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்டத்தில் 74 விழுக்காடு வாக்குப்பதிவு