ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடியைச் சேர்ந்தவர் பார்க்கவி(27). திருநங்கையான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது அந்த குழந்தையின் பெற்றோர் மீண்டும் அவர்களிடமே குழந்தையை ஒப்படைக்கும்படி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து குழந்தையைப் பிரியமுடியாத சூழலில் தன்னுடன் சேர்த்துவைக்கும்படி புன்செய் புளியம்பட்டி காவல்நிலையத்தில் பார்க்கவி புகார் மனு அளிக்க வந்தார். இந்த மனுவை பெறுவதில் காவல்துறையினர் காலதாமதம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த திருநங்கை பார்க்கவி, காவல் நிலையம் முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அதற்குள் அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்துக் காப்பாற்றினர். அங்குள்ள 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெட்ரோல் ஊற்றியதால் ஏற்பட்ட தோல் பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.