ஈரோடு: திருநகர் காலனியைச் சேர்ந்த தம்பி - வள்ளி தம்பதியினரின் இரண்டு மகன்கள் வெற்றிவேல் மற்றும் சக்திவேல். இருவரும் ஈரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் 8 மற்றும் 7ஆம் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இவர்களின் தாய் வள்ளி உயிரிழந்த நிலையில், இருவரும் காப்பகத்தில் தங்கி பள்ளிக்குச்சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஆதார் எண் பெறுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆதார் மையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இருவருக்கும் ஆதார் எண் கிடைக்கவில்லை. தொழில் நுட்பக் கோளாறால் ஆதார் பதிவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆதார் மையத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன் பின் பல முறை மாணவர்களின் பெரியம்மா, சுதா ஆதார் பதிவிற்காகச்சென்றுள்ளார். இதற்காக ஒவ்வொரு முறையும் 1500 ரூபாய் வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. எனினும் இருவருக்கும் ஆதார் எண் கிடைக்கவில்லை. இந்நிலையில், பள்ளியில் இருந்தும், விடுதியில் இருந்தும் ஆதார் எண்ணுடன் வருமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த பெரியம்மாவும் வளர்ப்புத்தாயுமான சுதா இரண்டு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர், மாணவர்களின் படிப்பு தடைபடாமல் இருக்க ஆதார் எண் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆதார் எண் இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை என்றும்; சாதிச் சான்று உள்ளிட்ட மற்ற சான்றிதழ்களை பெற முடியவில்லை என்றும் கூறினார். பள்ளியில் படிப்பைத் தொடர இத்தகைய சான்றிதழ்களை கோருவதால் வேலைக்குச் செல்லாமல் மாணவர்களை அழைத்துக்கொண்டு அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டதாகவும் வேதனைத் தெரிவித்தார். பின்னர் தனது நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றையும் அளித்தார்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு? சம்பந்தப்பட்டவர் மீது பெற்றோர் புகார்