ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "கோவை கூட்டத்தின்போது அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலின் பேரில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ஊடுருவி குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை நல்லாட்சித் துறையாக இருந்தது. அதிமுக ஆட்சியில், உள்ளாட்சித்துறை, ஊழலாட்சித் துறையாக மாறிவிட்டது. திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தடுத்து நிறுத்த அதிமுக சதிசெய்கிறது.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எட்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள செங்கோட்டையன் மூத்த அமைச்சராகவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் என்ன மாற்றம் நடக்கிறது. என்ன அறிவிப்பு வருகிறது என்பது குறித்து அவருக்கு தெரியாது. செங்கோட்டையன் முன்பாக முதலமைச்சர் பழனிசாமி கைகட்டி நின்ற காலம் இருந்தது.
தற்போது, பழனிசாமி முன்பாக செங்கோட்டையன் கைகட்டி நிற்கிறார். செங்கோட்டையன் ஒரு அப்பிராணி. அவர் குறித்து நான் விமர்சனம் செய்ய தயாராக இல்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தொகுதியான சிறுவலூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி கூட இல்லாததால் மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தும் நிலையுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், அதைப் பிரபலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோபியில் அனைத்து வசதியையும் கொண்ட ஒரு அரசு மருத்துவமனையைக் கூட அமைக்காத செங்கோட்டையனால் எவ்வித பயனும் இல்லை. கரோனா பரவல் காலத்தில் மக்களைச் சந்திக்க விரும்பவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் அறிவிப்பு பலகை வைத்திருந்தார். உயிருக்குப் பயந்து அமைச்சர் வீட்டில் முடங்கியிருந்தபோது, திமுகவினர்தான் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்" என்றார்.
இதையும் படிங்க: 'மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது' - எஸ்.பி.வேலுமணி