ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சீனாபுரத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி (70) மகன் முத்துச்சாமி (40) திருமணம் ஆகாதவர். கணவரை இழந்த ருக்குமணி உடல்நலக்குறைவு காரணமாக மாத்திரை உட்கொண்டுவருகிறார். இவரது மகன் முத்துச்சாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், திருமணம் செய்யாமல் சொத்துக்களை விற்று குடித்து வந்துள்ளார்.
இதனால், ருக்குமணிக்கும், முத்துச்சாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மகன் குடிப்பழக்கத்தை விடாததை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளான ருக்குமணி நேற்றிரவு வீட்டின் ஜன்னலில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வழக்கம்போல் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த முத்துச்சாமி தாய் உயிரிழந்ததையறிந்து வீட்டின் அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், இன்று காலை பால் வாங்குவதற்காக ருக்குமணி வீட்டிற்கு வந்த உறவினர்கள், ருக்குமணி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ருக்குமணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ருக்குமணியின் மகன் முத்துச்சாமியும் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்த முத்துச்சாமியின் சடலம் மீட்கப்பட்டது. மேலும், குடிப்பழக்கம் காரணமாக ஒரே நாளில் தாய்,மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு