இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இன்று காலை தொடங்கிய சூரிய கிரகணம் மதியம் வரை நீடித்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தபால் துறையில் பணிபுரிந்துவருகிறார்.
இவரது வீட்டில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கும்போது வீட்டின் முன்பு வெண்கல தட்டில் நவதானியங்கள் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிறுத்தி வைத்தனர்.
அந்த உலக்கை கிரகணம் நிகழும் போது விழாமல் நேராக அப்படியே நின்றது. இதையறிந்த கிராம மக்கள் அனைவரும் ராஜேந்திரன் வீட்டு முன்பு விழாமல் நின்றிருந்த உலக்கையை சென்று பார்த்தனர்.
கிரகண நிகழ்வு முடிந்தபின் உலக்கை விழுந்துவிடும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், "ஒவ்வொரு சூரிய கிரகணத்தின்போதும் இதுபோன்று உலக்கையை நிற்க வைப்பது வழக்கம். கிரகணத்தின் போது மட்டுமே உலக்கை கீழே விழாமல் நேராக நிற்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழித்தவறி வந்த மானை கடித்துக் கொன்ற நாய்கள்