ஈரோடு: சென்னைகேட் அரிசியில் கலந்து இருப்பது தமிழக அரசு நியாயவிலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கும் ரேசன் அரிசி தான் என சென்னைகேட் அரிசி நிறுவனத்தின் பங்குதாரான பசும்பொன் குற்றம் சாட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது பங்கு தொகையான 48 கோடி ரூபாயை தராமல் ஏன் ஏமாற்றி வருகிறீர்கள் என கேள்வி கேட்டதால் மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் பசும்பொன். இவர் ஈரோடு போலீசாரிடம் அளித்துள்ள புகாரில், சென்னைகேட் நிறுவனத்தினர் உரிமையாளர்கள் 3 பேரும் பசும்பொன்னுடன் சேர்ந்து தொழில் செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளனர். மேலும் நிறுவனத்தில் ஊழியராக இல்லாமல் அரிசி விற்பனை நிறுவனம் ஒன்றை புதியதாக தொடங்கி பங்குதாரராக சேர்ந்து கொள்ளும்படி பசும்பொன்னிடம் கூறியுள்ளனர்.
அதற்கு பத்து லட்சம் ரூபாய் பணத்தை முதலீடாக செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதன் பேரில் பசும்பொன் 10 லட்சம் பணத்தை செலுத்தி பங்குதாரராக ஆனவுடன் சென்னைகேட் நிறுவனத்தினரிடம் உடன்படிக்கை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இதன்பேரில் பசும்பொன் தான் வசிக்கும் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஈபிபி நகர் பகுதியில் ஸ்ரீ வில்வா டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி குடோன் அமைத்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் பெயரில் சென்னைகேட் அரிசி நிறுவனத்தின் அரிசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து ஈரோடு மாவட்டம், கரூர், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், அரிசிகடைகளுக்கு வழங்கி வந்துள்ளார்.
தனது நிறுவனத்தின் பெயரில் வாங்கிய சரக்கு வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்தி 2013 ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரை அரிசியை கடைகளுக்கு கொண்டு சேர்த்து வந்துள்ளார். ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரையிலும் என 360 கோடி ரூபாய் பதிப்பிளான சென்னைகேட் அரிசியை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதற்கு இடையே 2019 ம் ஆண்டு சென்னைகேட் நிறுவனத்தினர், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இனி வில்வா டிரேடர்ஸ் பெயரில் அரிசியை விற்பனை செய்ய வேண்டாம், சென்னைகேட் பெயரிலேயே இனி தமிழகம் முழுவதும் அரிசியை விற்பனை செய்து வழங்கும் படி கூறியுள்ளனர்.
பசும்பொன்னை தமிழகம் முழுவதும் சென்று சென்னைகேட் அரிசியை விற்பனை செய்து விற்பனையை அதிகரிக்க செய்ய கோரி அனுப்பியதுடன் சென்னைகேட் நிறுவனத்திற்கு வளர்ச்சி பணம் தேவைப்படுவதாகவும், வில்வா டிரேடர்ஸ் பெயரில் கணக்கு வைத்துள்ள வங்கியில் கடன் பெற்று தரும்படியும் சென்னைகேட் அரிசி நிறுவனத்தில் அரிசி விற்பனை செய்து வரும் பணத்தை வைத்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து அனுப்பி கடனை அடைத்து விடலாம் என்று கூறியுள்ளனர்.
சென்னைகேட் நிறுவனத்தினர் தமிழ்செல்வன், சங்கமேஸ்வரன், ராஜ்குமார் ஆகியோர் கூறியதை நம்பிய பசும்பொன் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் 10,85,854 ரூபாயும், ஆதித்யா பிர்லா பைனான்ஸ் நிறுவனத்தில் 23,87,491 ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியில் 11,71,680 ரூபாயும் உட்பட மொத்தமாக 1 கோடி ரூபாய் கடனாக தனது வங்கி கணக்கின் மூலம் பசும்பொன் பெற்று அதனை சென்னைகேட் நிறுவனத்தின் பஞ்சாப் நேசனல் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து மாதம் செலுத்த வேண்டிய கடனை செலுத்தி வந்துள்ளனர்.
இதற்கு இடையே சென்னைகேட் அரிசியை பசும்பொன் மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த நிலையில் அந்த அரிசியில் ரேசன் அரிசி கலந்துள்ளதாக பல்வேறு மாவட்டத்தில் உள்ள அரிசி விற்பனையாளர்கள் பசும்பொன்னிடம் புகார் தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்த பசும்பொன் சென்னைகேட் நிறுவனத்தினர் தமிழ்செல்வன், சங்கமேஸ்வரன், ராஜ்குமாரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கடைக்காரர்கள் புகார் தொடர்பாக பசும்பொன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் நல்ல முறையில் சென்னைகேட் அரிசி விற்பனை ஆகும் நிலையில் ஏன் ரேசன் அரிசியை கலந்து விற்பனை செய்யவேண்டும், ரேசன் அரிசி கலந்த அரிசியை ஏன் எனது பெயரில் உள்ள வாகனத்தில் ஏற்றி விற்பனை செய்கிறீர்கள், நாளை காவல்துறையினர் ரேசன் அரிசியை கடத்தியதாக வாகனத்தை பிடித்தால் வாகனத்தின் உரிமையாளர் என்ற வகையில் தனக்கு தான் சிக்கல் வரும் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இதற்கு “சென்னைகேட் நிறுவனத்தினர் அரிசி நல்லமுறையில் விற்பனை ஆகி வருகிறது. அரிசியை பாலிஸ் செய்து தான் கலந்து கொடுத்து கொண்டு உள்ளோம். யாரும் கண்டு பிடிக்க முடியாது” என கூறியுள்ளனர். மேலும் தாங்கள் சொல்லும் வேலையை மட்டுமே பசும்பொன் கேட்க வேண்டும், மற்ற விசயத்தில் தலையிட கூடாது என்றும் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ந்து போன பசும்பொன் இனி இவர்களுடன் சேர்ந்து தொழில் செய்தால் கெட்ட பெயர்தான் கிடைக்கும் என கூறி 2015 முதல் 2023 வரையில் 320 கோடி ரூபாய்க்கு தான் அரிசியை விற்பனை செய்த தனது பங்கு 15 சதவீதமான 48 கோடி ரூபாய் மற்றும் பங்குதாரராக சேர்ந்து தொழில் செய்ய பெற்று தந்த கடன் தொகையில் மீதம் செலுத்த வேண்டிய சுமார் 35 லட்சம் பணத்தை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்கு சென்னைகேட் நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்ததுடன் ஓரு கட்டத்தில் பசும்பொன் அலுவலகமான ஸ்ரீ வில்வா டிரேடர்ஸ் அலுவலகத்திற்கு சென்று கைகலப்பில் ஈடுபட்டதுடன் பசும்பொன் பெயரில் வாங்கிய 6 க்கும் மேற்பட்ட சரக்கு வாகனம், வாகனங்களின் ஆர்சி புத்தகம், வங்கி ஆவணங்கள் மற்றும் சென்னைகேட் நிறுவனத்தினர் தமிழ்செல்வன், சங்கமேஸ்வரன், ராஜ்குமார் ஆகியோருடன் செய்து கொண்ட உடன்படிக்கை ஒப்பந்தம் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் பசும்பொன் தனது நிறுவனமான ஸ்ரீ வில்வா டிரேடர்ஸ் நிறுவனத்தின் பெயரில் வங்கியில் பெற்று தந்த கடன் தொகையில் சுமார் 35 லட்சம் ரூபாய் வரையிலான கடனையும் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக பசும்பொன், காவல்துறையில் புகார் தெரிவித்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் புகாருக்கு ரசீது மட்டுமே கொடுத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும் போது சென்னைகேட் நிறுவனத்தினர் தமிழ்செல்வன், சங்கமேஸ்வரன், ராஜ்குமார் ஆகியோர் வராமல் நிறுவனத்தின் ஊழியர்கள் மேலாளர் ஆகியோர் மட்டுமே நேரில் வந்து பெயர் அளவுக்கு மட்டுமே பதில் சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர் என புகார் தெரிவித்துள்ளார். பிரபல நிறுவனத்தினர் விளம்பரம் செய்து விற்பனை செய்து வரும் அரிசி ரேசன் அரிசி தான் என்பதை பங்குதாரராக இருந்தவர்பேசியிருப்பது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னைகேட் அரிசி நிறுவனத்தின் நிறுவனர்கள் தமிழ்ச்செல்வன், சங்கமேஸ்வரன், ராஜ்குமார் ஆகியோரை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொள்ளப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர்கள் இது தவறான குற்றச்சாட்டு எனவும், அவதூறு பரப்பும் நோக்கில் பசும்பொன் புகார் கூறுவதாகவும் கூறினர். சட்டரீதியான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. நடந்தது என்ன?