ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட குருமந்தூர் கோசனம் கெட்டிச் செவியூர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பரப்புரை மேற்கொண்டார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ஜனவரி மூன்றாம் தேதிக்குள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினிகள் அமைக்கப்பட்டு இணையதள உதவியுடன் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் வினாத்தாள்கள் வெளியாகாமால் இருக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வினாத்தாள் வெளியானது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அமரும் மேசைகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மாணவர்களுக்கு அளிக்கவுள்ள ஆங்கில பயிற்சியின் மூலம் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்து அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வருகின்ற கல்வியாண்டில் மூன்று லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நீதி போதனைகள் வகுப்புகள் எடுக்கப்படவுள்ளன. மேலும், ’குட் டச்’, ’பேட் டச்’ குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளர்: வீடியோ வைரல்!