ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நான்கு கட்டங்களாக செயல்படுத்த பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'தனியார் பள்ளிகளில் இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும் சிறப்பு வகுப்புகள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் விருப்பத்துடனேயே நடைபெறுகிறது. இருப்பினும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிளஸ் 2 பொதுத்தேர்விற்குப் பிறகு என்ன படிக்கலாம் என்ற மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க அறிமுகம் செய்யப்பட்ட உதவி எண் மூலம் கடந்தாண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீட் தேர்வுக்குத் தேவையான பாடங்கள் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே உள்ளது. பொதுத்தேர்வு முடிந்தவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுப்பயிற்சி அளிக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம்