ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக எல்லையான தாளவாடியிலிருந்து மலைக்கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று (டிசம்பர் 13) மாலை பனஹள்ளியிலிருந்து தாளவாடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை ஓட்டுநர் பண்டாரு என்பவர் இயக்கியுள்ளார்.
அப்போது பேருந்துக்குப் பின்னால் தமிழ்புரத்தைச் சேர்ந்த சிவநாதன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பேருந்தை முந்திச் செல்ல வழிவிடுமாறு சிவநாதன் ஹாரன் அடித்துள்ளார். மிகவும் குறுகலான ஒருவழிப் பாதையானதால் பேருந்து ஓட்டுநர் வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர் பயணிகளை இறக்கிவிட மல்லன்குழியில் பேருந்து நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவநாதன், பேருந்து ஓட்டுநர் பண்டாருவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த பிற அரசு ஓட்டுநர்கள், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்யக்கோரி தாளவாடி பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுவரையிலும் பேருந்தை இயக்க மாட்டோம் எனவும் ஓட்டுநர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகத் தாமதமானதால் பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலர் - போலீஸ் விசாரணை