ஈரோடு: கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி, கேர்மாளம் மலைக்கிராம மாணவர்கள் தங்கி பயிலுவதற்காக சத்தியமங்கலத்தில் அரசினர் மாணவர் விடுதி 1979ம் ஆண்டு கட்டப்பட்டது. கீழ் தளத்தில் 12 அறைகள் மற்றும் மேல் தளத்தில் 6 அறைகள் என 18 அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்றனர்.
தற்போது இந்த கட்டடத்தின் மேற்கூரை மழையில் நனைந்து வலுவிழந்து எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. பெரும்பாலான அறைகளில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. அண்மையில் பெய்த மழையில் மாணவர்கள் தங்கும் அறை எண் 3 இல் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது தங்கும் அறைகள் அபாயகரமாக இருப்பதால் விடுதியில் சேர்க்க வரும் மாணவர்களின் பெற்றோர் தங்கும் விடுதியில் தங்க வைக்க தயங்குகின்றனர். தற்போது கடம்பூர், குன்றி, காடகநல்லியைச் சேர்ந்த 10 பட்டியலின மாணவர்கள் தங்கியுள்ளனர்.
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் ஆபத்தான மேற்கூரைகளை நீக்கி விட்டு புதிய பாதுகாப்பான கான்கிரீட் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மும்பை அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு