கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவில் சென்னேகவுடா தொட்டி என்ற் சிறிய கிராமம் உள்ளது. வனத்தையொட்டியுள்ள இக்கிராமத்தின் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தன. அதேபோன்று நேற்றும் 10 வயது பெண் யானை ஒன்று வனத்திலிருந்து வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக அந்த யானை அங்குள்ள தரைமட்ட கிணறு ஒன்றில் தவறி விழுந்தது.
கிணற்றில் விழுந்து யானை தத்தளிப்பதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கிராம மக்கள் உதவியுடன் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யானையைக் கயிறு கட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் மேலே இழுக்க முயற்சி செய்தனர். அப்போது யானை மேலே ஏறி வந்தபோது கால் இடறி மீண்டும் கிணற்றில் விழுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து யானை எளிதாக மேலே வர பக்கவாட்டு தரைப் பகுதியல் மண் அள்ளப்பட்டு, சரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த முயற்சிக்கு பலனளிக்கும் விதமாக யானை இலகுவாக மேலே ஏறி வந்தது. மேலே வந்த யானை கோபத்தில் ஜேசிபியை முட்டித் தள்ளிவிட்டு வனத்தை நோக்கி ஓடிச் சென்றது.
இதையும் படிங்க... சூளகிரியில் 13 காட்டு யானைகள் தஞ்சம் - மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை