விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் பிரீகேஜி, எல்கேஜி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று அரசுப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2018ஆம் ஆண்டு முதல் பிரீகேஜி, எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு அதற்கு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதுபோல் அரசுப்பள்ளிகளோடு, இணைந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை நடத்துமாறு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.
மேலும், மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்துவைக்குமாறு அறிவுறுத்தியது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில் தயிர்பள்ளம், மாராயிபாளையம், மாரம்பாளையம் ஆகிய மூன்று பள்ளிகளின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மழலையர் வகுப்பு தொடங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட மையங்களாகும். ஆனால், இந்த மூன்று மையங்களும் இன்று காலை முதல் திறக்கப்படவில்லை.
இதற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பணிக்கு வராததால், இந்த மூன்று மையங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதேபோன்று, சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்கள் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக காலை முதல் திறக்கப்படவில்லை என்றும அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.