சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை, கோடிபுரம், தொட்டபுரம், முதியனூர் உள்ளிட்ட 10க்கும் அதிகமான மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மலைக் கிராம மக்களின் பிரசவத்திற்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தினால், ஆம்புலன்ஸ் தாளவாடி, ஆசனூர் ஆகிய இரு பகுதிகளில் இருந்து வரவேண்டியுள்ளது. சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளதால், இந்த ஆம்புலன்ஸ் வாகனம் சென்றடைய அரை மணிநேரம் ஆகிவிடுகிறது.
இதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு, குறித்த நேரத்தில் மருத்துவமனை செல்லமுடியாமல் தவித்து வந்து உள்ளனர். இப்பகுதியிக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை அளித்ததைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தில் 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.
இதில் பர்கூர் மலைப்பகுதிக்கு ஒரு வாகனமும், கடம்பூர் மலைப்பகுதிக்கு ஒரு வாகனமும், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை சுற்றுவட்டாரப் பகுதிக்கு ஒரு வாகனமும் வழங்கப்பட்டது.
இதில் தல மலைக்கு வழங்கப்பட்ட வாகனம் நேற்று அப்பகுதிக்கு சென்று ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது. முன்னதாக தல மலைக் கிராமத்தில் உள்ள மலைக்கிராம மக்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மலைக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளதால், தலமலை பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க:அரசு 108 ஆம்புலன்ஸில் முறைகேடு? ஊழியர்கள் மீது பொய் புகார்!