ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் பகுதியில் எஸ்.ஆர்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், பள்ளியில் தேர்வு முடிந்த பின்னர் வழக்கம்போல் மாணவர்களை வீட்டில் கொண்டுசென்று விடுவதற்காக 38 மாணவ, மாணவிளுடன் புஞ்சை புளியம்பட்டி - சத்தியமங்கலம் சாலையில் பள்ளி வேன் சென்றது.
அப்போது, பள்ளி வாகனம் புங்கம்பள்ளி குளம் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி வேனின் மீது மோதுவது போல் இடதுபுறம் நோக்கி வந்தது.
இதனைக் கண்ட வேன் டிரைவர் சாமர்த்தியமாக வேனை திருப்பினார். இதில், பள்ளி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது சாய்ந்த நிலையில் இருந்த வேனின் அவசரகால கண்ணாடியை உடைத்து வேன் டிரைவர் குழந்தைகளை காப்பாற்றினார்.
டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டு வேனை திருப்பியதால் வேனில் இருந்த பள்ளி மாணவ, மாணவியர் எந்தவித சிறுகாயமின்றி உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.