சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த சில நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.
இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்றிரவு (மே 9) காளை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காளைகளை பிடித்து வருவதற்காக புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் சென்று காளைகளை பிடித்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
இதையடுத்து, காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயிலைச் சுற்றி அழைத்து வரப்பட்டு, கோயில் முன்பு கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை நிற்கவைத்து மரியாதை செய்து அதில் ஒரு காளையை மட்டும் தேர்வு செய்து கம்பம் நடத்தப்பட்ட இடத்தில் கீழே படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றி மீண்டும் காளையை அவிழ்த்து விட்டனர்.
இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டு கண்டுகளித்தனர். அதாவது கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சிவனாக பாவித்து வழிபாடு நடத்தி, கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை அழைத்து வந்து நந்தீஸ்வரரை வழிபட்டு ஒரு காளையை படுக்கவைத்து ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்து ஊருக்கு நன்மை பயக்கம் என்பது ஐதீகம்.