சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம், நால்ரோடு பகுதியைச சேர்ந்தவர் ராஜேந்திரன்; விவசாயி. இவரது தோட்டத்தில் நேந்திரம், ரஸ்தாஸி, கதளி, ஆந்திரா நேந்திரம் ஆகிய வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனத்தையொட்டி அமைந்துள்ள இவரது தோட்டத்தில் சனிக்கிழமையன்று காட்டுயானைகள் புகுந்து அங்குள்ள சாகுபடி செய்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. மேலும் வாழைமரங்களை முறித்து கீழே சாய்த்தன.
இதனால் அறுவடைக்கு தயாரான 250-க்கும் மேற்பட்ட நேந்திரம், கதளி வாழை மரங்கள் சேதமைடந்தன. இது குறித்து விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து, காட்டு யானைகளை துரத்தினர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.