ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவர் மீது அப்பகுதியிலுள்ள நிர்மலா, அமிதா ஆகியோர் பாரதி, அவரது குடும்பத்தார் மீது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனுக்களை வழங்கினர்.
அந்த மனுவில், தங்களிடமிருந்து பணத்தைப் பெற்று கூட்டுறவு வங்கி புராஜெக்ட் பணி வாங்கித் தருவதாகவும், தரகுத் தொகை தருவதாகவும் கூறி மோசடி செய்து பணத்தைப் பெற்றுவிட்டு தற்போது பணத்தைத் திருப்பித் தராமல் புராஜெக்ட பணியும் தராமல், தரகுத் தொகையும் தராமல் ஏமாற்றுவதாக கூறியுள்ளனர்.
புகார் மனுக்களை வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் பாரதி எங்களை அணுகி, தான் பவானி கூட்டுறவு வங்கியில் பணியாற்றிவருவதாக கூறினார்.
இந்த வங்கியில் குறைந்தத் தொகையை முதலீடு செய்தால் தரகுத்தொகை அதிகமாக கிடைக்குமென்றும், குறைந்த காலத்தில் பணம் திரும்பக் கிடைக்கும் என்றும் நம்பிக்கையளித்தார்.
அதுமட்டுமல்லாது பணம் செலுத்தினால் கூட்டுறவு வங்கியின் புராஜெக்ட் பணியும் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தை கூறினார்.
தங்களிடம் பணமில்லையென்று பாரதியிடம் கூறியும் தொடர்ந்து இதுபோல் தன்னிடம் பணம் செலுத்தியவர்கள் பெற்ற தரகுத் தொகையைப் பாருங்கள் என்று தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்திவந்தார்.
ஒரு சமயத்தில் அவரது வற்புறுத்தல் தாங்காமல் வீட்டில் கணவருக்குத் தெரியாமல் சேமிப்புப் பணம், மகளது திருமணத்திற்கு வைத்திருந்த ரொக்கப்பணம் என ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய் என பாரதியிடம் வழங்கினோம்.
அதற்குப் பிறகு வீட்டுப் பக்கம் வராத பாரதியை நாங்களே தேடிச் சென்று பார்த்தபோது பாரதியின் பெற்றோர் வங்கிக் கணக்கில் அதிகப்பணம் வந்துள்ளது. ஆனால் எங்களுக்கான தரகுத்தொகை வரவில்லை.
ஆகவே பணத்தைத் திருப்பித் தாருங்கள் எனக் கேட்டபோது பாரதியும் அவரது குடும்பத்தாரும் பணத்தைத் திருப்பித் தர முடியாது, யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்துகொள்ளுங்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது எனக் கொலை மிரட்டல் விடுத்தனர்.
அப்போது நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எங்களது பணத்தைத் திருப்பிப் பெறுவதற்காக இன்று புகார் மனு வழங்கியுள்ளோம்" எனக் கூறினர்.
மேலும், "இதுபோல் எங்கள் பகுதியில் 20-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து 60 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று மோசடி செய்யப்பட்டிருக்கிறது. எங்களது மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்" என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.