ஈரோடு அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த கனிராவுத்தர் குளத்தில் ஆண்டுதோறும் தேங்கியிருக்கும் தண்ணீர் அப்பகுதியைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை நிலங்களுக்கு பாசன வசதியையும், குளத்தைச் சுற்றியிருந்த பல லட்சம் குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் மட்டத்தையும் வழங்க உதவியாகவும் இருந்தது.
சுமார் 44 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்திருந்த குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பினால் குறுகி தற்போது 13 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட குட்டையாக குறுகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கனிராவுத்தர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை நன்னீர் குளமாக்கிட வேண்டும் என்று கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் பயனாக, தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி அக்குளத்தை நனனீர் குளமாக்கிட அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், மேற்கொள்ளப்பட்ட பணியில் குளத்தை மேலும் குறுகலாக்கும் நடவடிக்கையை மாநகராட்சித் துறை மேற்கொண்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு குளத்திற்குள் நடைபாதை அமைத்திடவும், குளத்தை குறுக்கி நீர்வளத்தை அழித்திடவும் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் குளத்தை அளவீடுசெய்து ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று (அக். 01), மாநகராட்சித் துறை, உள்ளூர் திட்டக் குழுமத்தினர், அளவீட்டுப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர்களைக் கொண்ட குழுவினர் கனிராவுத்தர் குளத்தையொட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் அளவீடு மேற்கொண்டனர்.
அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அத்துக்கற்களைத் தேடி அளவீட்டை மேற்கொண்ட குழுவினர் குளத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் நாள் முழுவதும் பணியை மேற்கொண்டனர். இந்த அளவீட்டுப் பணியின்போது கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினரும் உடனிருந்தனர்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் கூறுகையில், "ஆக்கிரமிப்பு இருப்பதாகத் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அளவீட்டுப் பணி நடைபெற்றுவருகிறது. அளவீட்டுப் பணி நிறைவுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.